450 தொகுதிகளில் பா.ஜனதா போட்டி: ராஜ்நாத் சிங் தகவல்
புதுடெல்லி, செப். 17:-
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவி காலம் வருகிற 2014 மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாரதீய ஜனதா கட்சி குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேர்தலுக்கு ஆயத்தமாகி விட்டது.
அடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியின் செல்வாக்கு பற்றியும் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பற்றியும் ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளது. பாராளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கை 552. இதில் 530 எம்.பி.க்கள் மாநிலங்களில் இருந்தும் 20 பேர் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
ஆங்கிலோ- இந்தியன் வகுப்பைச் சேர்ந்த 2 பேரை எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிப்பார். மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் மெஜாரிட்டிக்கு 275 எம்.பி. தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு அளித்தது போக 450 தொகுதிகளில் பாரதீய ஜனதா போட்டியிட தீர்மானித்துள்ளது.
இதுபற்றி பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங் அளித்த பேட்டி வருமாறு:- பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. நாங்கள் இப்போது பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துள்ளோம். பாராளுமன்றத்தின் மழை கால கூட்டத் தொடர் முடிந்ததும் எங்களது தேர்தல் பணிகளை தொடங்குவோம்.
முதலில், போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்போம். அடுத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம். அதற்கு போதுமான கால அவகாசம் உள்ளது. மக்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப உரிய நேரத்தில் பிரசார பணிகளை தொடங்குவோம். நாடு முழுவதும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு அலை வீசுகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகள் எங்களுக்கு சாதகமாக இருக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிக பட்சமாக 450 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
2009 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 433 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 116 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டது.













0 கருத்துகள்